வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பேண ஈரான் முழு உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி, எனினும் ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்கா அளிக்கும் வாக்குறுதிகளை நம்ப முடியுமா? என எனவும் கேள்வி எழுப்பினார்.
ஐ.நா. பொதுச் சபையில் நேற்று உரையாற்றும்போதே ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி இவ்வாறு தெரிவித்தார்.
அணுசக்தி ஒப்பந்தத்துக்குபுத்துயிா் அளிப்பதில் நாங்கள் முழு உறுதியுடன் உள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தை, இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது. ஆனால், இது தொடர்பாக நாடுகள் அளிக்கும் உறுதிமொழிகள் உறுதியாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுவிட்டு, பின்னர் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது. எனவே, போதிய உத்தரவாதம் இல்லாமல் அமெரிக்கா அளிக்கும் வாக்குறுதிகள் நம்பிக்கைக்குரியவையாக இருக்குமா? என்பது சந்தேகமே எனவும் இப்ராஹிம் ரய்சி குறிப்பிட்டார்.
ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அனு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.
அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா இருந்தபோது செய்துகொள்ளப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அவருக்குப் பின் வந்த டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமுல்படுத்தினாா்.
அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதன் காரணமாக அணுசக்தி ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைக்க, ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை அண்மைக் காலங்களில் தொடர்ச்சியான இடம்பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.